அரவிந்த் பொதுவாகவே நிறைய ஊர் சுற்ற ஆசைப்படுவான், புது இடத்துக்கு போகணும் புது மனிதர்களை சந்திக்கணும், அவங்களோட வாழ்வியலை தெரிஞ்சுக்கிறது மட்டுமில்லாம அந்த வாழ்வியல் சார்ந்து தானும் ஒரு இரண்டு நாள் அவங்க கூட இருந்து அந்த லைஃப்ப எக்ஸ்பிளோர் செய்யணும்ன்னு ஆசைப்படுறவன் அவன்,
அப்படி இருக்கும் அரவிந்த் கிட்ட கையில வேலையும் பணமும் இல்ல,முயற்சி செய்தும் சரியான வேலை கிடைக்காததால் கையில் பணமும் இல்லாததால் விரக்தியின் உச்சத்தில் இருந்தான்,கூண்டுக்குள் இருக்கும் பறவை சிறை வாசம் இருப்பதை போல் தான் அவிழ்க்க முடியாத முடிச்சில் மாட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதை அவனால் ஒவ்வொரு நொடி கடக்கும் தருணமும் ஒரு யுகமாக செல்லும் போது உணர முடிந்தது,
இப்படி விரக்தியாக போன நாட்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக போக ஒரு கட்டத்தில் அரவிந்த்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் வீட்டில் இருந்தே செய்யும் படி காலை ஒன்பது மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிவது போலான வேலை கிடைத்தது அதுவும் தான் மிகவும் ரசித்து செய்யும் கன்டென்ட் ரைட்டிங் பணியிடத்திற்கு,கொஞ்சம் கம்மியான சம்பளம் தான் என்றாலும் இப்போதிருக்கும் பசிக்கு பிரியாணி தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட தக்காளி சாதம் கிடைத்தாலும் பட்டை சோம்பு வாசத்துடன் சேர்த்து அதை பிரியாணியாக நினைத்து சாப்பிடும் அளவு அரவிந்த்திற்கு வேட்கை இருந்தது,சாப்பிடும் நாக்கிற்கு தான் சுவை தெரியுமே தவிர வயிற்றுக்கு இல்லையே அப்படியாக கிடைத்த வேலையை ரசித்து செய்ய தொடங்கினான் அரவிந்த்,
இப்படியான அரவிந்த் கடவுள் நம்பிக்கையில் முற்றிலும் மாறுபட்டவன், தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக்கொள்வதே அவனுக்கு மிகவும் பிடிக்கும், அதே நேரத்தில் தான் ஒரு நாத்திகன் என்பதால் ஆத்திகனாக இருப்பவர் யாரிடமும் தனது நாத்திக உரையை திணிக்கமாட்டான், அவனை பொறுத்தவரை ஆத்திகன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை வழிபட்டு வருகிறான் அது இருளில் இருக்கும் அவனுக்கான ஒரு வெளிச்சம்,அந்த வெளிச்சம் அவனுக்கு நம்பிக்கையை கொடுப்பதால் அந்த நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் தான் எதுவும் பேசக்கூடாது என நினைப்பவன் இவன்,அதே போல் ஆத்திகனும் அவனுடைய கடவுள் சார்ந்த உரையை இவனிடம் பேசக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பான் அரவிந்த்,
அப்போது ஒரு நாள் கடைசி விவசாயி படத்தை அவன் பார்க்க நேரிடுகிறது, அதில் இடம்பெறும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் பாடலும் அதற்கு மயில் அகவும் சத்தத்துடன் காட்சியமைக்கப்பட்டிருந்த விதமும் இவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, இப்போது வரையிலும் விரல் விட்டு எண்ண முடியாத அளவு அந்த பாடலின் காட்சியமைப்பை பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டும் சிலாகித்துக்கொண்டும் இருக்கிறான், அந்த அளவு டி.எம்.சவுந்தர் ராஜன் அவர்களின் குரல் இவனுக்குள் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி சென்று விட்டது என்றே சொல்லலாம்,
அதன் பிறகு அவன் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை முருகன் கோவிலுக்கும் சென்று கொண்டிருக்கிறான், இன்னும் போகவேண்டிய கோவில்கள் ஏராளம் இருக்கிறது கடைசியாக மலேசியா முருகன் கோவில் போகவேண்டும் என்பதும் அவனுடைய டூர் ப்ரோக்ராமில் இருக்கிறது, இதில் என்ன புதுமை என்றால் ஒவ்வொரு முருகன் கோவிலாக மாலை போடாத பக்தனாக ஏறி இறங்கினாலும் ஒரு போதும் எனக்கு அதை கொடு இதை கொடு,அவங்க நல்லா இருக்கணும் நான் நல்லாருக்கணும், இது காணிக்கையா செய்றேன், உண்டியல்ல காசு போடுறேன் அப்படி எல்லாம் தனக்காகவும் சரி மத்தவங்களுக்காகவும் சரி அரவிந்த் இப்பவும் முருகன் கிட்ட வேண்டிகிட்டது இல்ல, நாத்திகனாக இருக்கும் அவனுக்கு அது தேவைப்படவும் இல்லை, ஆனால் கற்பனை என்றாலும் பாடல் இவனுக்கு முருகன் கோவிலின் மேல் ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணி சென்று விட்டது,மற்ற கோவில்களுக்கெல்லாம் இவன் செல்வதில்லை,முருகன் கோவிலுக்கு மட்டும் செல்கிறான், அங்கே ஒலிக்கும் முருகன் பாடலை கேட்கிறான்,ரொம்ப நேரம் உட்காருகிறான், திருச்செந்தூர் மாதிரியான கோவில்களின் கடற்கரையில் தனியே அமர்ந்து அங்கு இருக்கும் மக்களின் வாழ்வியலை பார்த்து ரசிக்கிறான், அங்கு விற்கும் சில்லுக்கருப்பட்டியை கடித்து பேரின்பம் அடைகிறான், பழனி சென்றால் பஞ்சாமிர்தத்தை சுவை பார்க்கிறான்,முருகன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள அத்தனை சுற்றுச்சூழலையும் பார்த்து வைப் ஆகிறான்,அவனுக்கு இந்த ஃபீல் இந்த வைப் இந்த திருச்செந்தூர் உப்புக்காற்று, இந்த பழனி மலை ஜவ்வாது வாசம் இதுவே சிதைந்து போய் கிடந்த அரவிந்த்திற்கு போதுமானதாக இருக்கிறது,
தான் சாம்பாதிக்கும் கொஞ்சமான சம்பளத்தில் சிறிய பகுதியை இப்படியாக தனது Inner Peace என சொல்லப்படும் மன நிம்மதிக்காக செலவு செய்துகொண்டு தான் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் அந்த வாழ்வியலுடனானவனாக கை கோர்த்து தன்னை புதிய ஒருவனாய் எக்ஸ்பிளோர் செய்து வருகிறான்,
"இந்த மன நிம்மதி இருக்குல்ல சார் அதுக்கு என்ன தேவையோ அது நம்ம புத்திக்கு சொல்லி அனுப்பும் அது காயப்பட்ட நேரத்துல, அப்படி சொல்லி அனுப்பும் போது அந்த மன நிம்மதிக்கான வலி நிவாரணிய ஒரு குழந்தைக்கு அம்மா தாய்மை உணர்வோட பால் கொடுக்குறது போல நம்ம அதோட காயத்துக்கு பக்குவத்தோட இப்படி கவனிச்சுக்கிட்டாலே போதும் மனசும் நிம்மதியா இருக்கும் நம்மளும் நிம்மதியா இருப்போம்" இதோ இந்த அரவிந்த் இப்போ இருக்கானே ஆறு நாள் வேலை பார்த்துட்டு ஒரு நாள் ஜாலியா ஊர சுத்திட்டுன்னு அப்படி இருக்கலாம்,
ஆம்,இப்பிரபஞ்சம் அழகானது
Comments
Post a Comment